2-3 தோல்விகளால் இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது; அனைவரும் அசத்தினால் உலக கோப்பையை வெல்லலாம்: கங்குலி நம்பிக்கை

மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம்தேதி டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கடைசியாக ஆடிய போட்டிகளில் 3-4 தோல்விகளையும் சந்தித்துள்ளது. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் தொடர் தோல்விகள் கவலையளிக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி கூறியதாவது:- இந்திய அணி 2-3 தோல்விகளை அடைந்திருக்கிறது. ஆனால் இந்திய அணியின் செயல்பாடு ஏறுமுகமாகதான் இருக்கிறது.

ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். அவர் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது வெற்றி விகிதம் 82 சதவீதம் ஆகும். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 35 போட்டிகளில் 4 தோல்விகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  ஆகிய இருவருமே அணி மீது அதிக அக்கறை கொண்டவர்கள். கண்டிப்பாக நாக்பூரில்  (இன்று நடைபெறும்)  டி20 போட்டியில் கம்பேக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். 2-3 தோல்விகளால் அணி மீதான எனது மதிப்பீடு குறையாது.

அதே நேரத்தில் உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், அனைத்து வீரர்களும் அசத்தலாக ஆடவேண்டும். கோஹ்லி, ரோஹித், கே.எல்.ராகுல், ஹர்திக்பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என பேட்ஸ்மேன்களும் மற்றும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும். ஏனெனில் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை வைத்து உலகக் கோப்பையை வெல்ல முடியாது. ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: