ஆம்பூர் சார்பதிவு அலுவலகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த சார்பதிவாளர் இட மாற்றம்

வேலூர்: ஆம்பூர் சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த சார்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி உட்பட 168 அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணியாற்றி வந்த ரமணன், வேலூர் பதிவு மண்டலத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் பதிவு மாவட்டத்தில் சார்பதிவாளராக இருந்த ரமணன் ஆம்பூரில் சார்பதிவாளர் பணி காலியாக இருந்ததால் அந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்திருப்பது, மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, ரமணன் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு, தற்போது, வேலூர் பதிவு மண்டலத்தில் பத்திரப்பதிவு இல்லாத, நிர்வாக பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு செய்ததில், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது’ என்றனர்.

* முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய சார்பதிவாளர்

அதிமுக ஆட்சியில் அப்போதைய பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு, ஆம்பூர் சார்பதிவாளராக இருந்த ரமணன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகவும், போலி ஆவணங்கள் வைத்தும் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அமைச்சருடன் தொடர்பில் இருந்ததால், அதிகாரிகளும் ரமணன் மீது அப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

Related Stories: