ஐதராபாத்தில் இந்தியா- ஆஸி. டி20 போட்டி டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி: பெண் உட்பட 3 பேர் கவலைக்கிடம்

திருமலை: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக டிக்கெட் பெற வந்த ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியால் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், பெண் உட்பட 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் உப்பலில் உள்ள ராஜூவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25ம் தேதி (நாளை மறுதினம்) இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான  டிக்கெட் செகந்திராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் வழங்கப்படுவதாக ஐதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் அறிவித்திருந்தது.

இந்த டிக்கெட்டுகளை பெற நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கிரிக்கெட் ரசிகர்கள் பாரடைஸ் அருகே இருந்து செகந்திராபாத் ஜிம்கானா மைதானம்  வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் டிக்கெட் வழங்க தொடங்கிய சில மணி நேரங்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயன்று போலீசாரின் கட்டுப்பாட்டை மீறினர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் முடியவில்லை. 4 கவுண்டர்கள் மட்டுமே இருந்தது.

ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டுமே என்ற கட்டுப்பாடுகளால் போலீசாருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. மேலும், ரசிகர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் அதனை காண டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் மேலும் திரண்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பெண் உட்பட 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது.

Related Stories: