‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தில் குறை தீர்க்க காவலர்களிடம் கோரிக்கை மனு வாங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி

சென்னை: காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், போலீசாரிடம் நேற்று முதல்வர் மு,க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக்கொண்டு, அதை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை தமிழக காவல்துறை செய்து வருகிறது. மேலும் புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல் துறையினரின் நலன் காத்திட, காவலர்கள் தங்கள் உடல் நலனை காத்திட, குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிட, இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை காவலர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு, காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்வு, ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு ரூ.300 சிறப்பு படி, 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை, காவலர்களுக்கான விடுப்பு செயலி, காவலர்களுக்கான இடர்படி ரூ.1000 உயர்வு போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில், ‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் காவலர்களிடம்  இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க காலை 10 மணி அளவில் டிஜிபி அலுவலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரை உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு வரவேற்றனர். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தம் விதமாக டிஜிபி அலுவலக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழம் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். இதையடுத்து, உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், டிஜிபி அலுவலகத்தில் காவலர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  அதை தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டார். அதில், ‘‘தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து காவலர்களின்  குறைகளை கேட்டறிந்தும், உயரதிகாரிகளை சந்தித்ததும் எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற காவல் துறை வாசகம் சமூக நீதி, சமத்துவம், மனித கொள்கைகளை கடைபிடிப்பதை பறைசாற்றுகிறது. காவல்துறை அதன்படி செயல்படுவதை பாராட்டுகிறேன். மக்கள் போற்றும் பாதுகாப்புக்கு பணியாற்றி வரும் காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு துணை நிற்கும் காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

* தலைவர்கள் நட்டு வைத்த மரக்கன்றுகள்

டிஜிபி அலுவலக வளாகத்தில் கடந்த காலங்களில் முதல்வர்களாக பதவி வகித்த தலைவர்கள் மரக் கன்றுகளை நட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதை தொடர்ந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா 2 முறை மரக் கன்றுகளை நட்டார். அதேபோன்று முதல்வராக இருந்த கலைஞரும் 2 முறை மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கலைஞர் மகிழ மரக் கன்றை நட்டு வைத்தார். தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக டிஜிபி அலுவலகம் வந்த மு.க.ஸ்டாலின், கலைஞரை போலவே மகிழம் மரக் கன்று ஒன்றை நட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* முதல்வர் வாங்கும் கோரிக்கை மனுக்களால் 800 போலீசார் வரை பலனடைய வாய்ப்பு: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது: உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் மனுக்கள் வாங்கியதன் அடையாளமாக 10 பேரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களிடம் குறைகளை கேட்டார். மேலும் டிஜிபி அலுவலகக் கட்டிடம் குறித்து எங்களிடம் விசாரித்தார். இந்த கட்டிடத்தை 1993ல் இடித்து விட்டு போலீஸ் நகரம் உருவாக்கப்படும் என அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், பழமையான கட்டிடம் என்பதால், அதை இடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதை தொடர்ந்து 1998ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, இந்த கட்டிடத்தை புதுப்பித்து கொடுத்தார். இப்போது வரை கம்பீரமாக இருக்கிறது என்பதை முதல்வரிடம் சொன்னோம். மேலும், மாவட்ட வாரியாக போலீசாரிடம் இருந்து எத்தனை மனுக்கள் வந்துள்ளது. அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என முதல்வர் கேட்டார். அதற்கு டிஜிபி அளவில் எங்களால் தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி உள்ளோம். சில மனுக்களை தமிழக காவல் துறையால் தீர்வு காண முடியாது என்பதால், தமிழக அரசுதான் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்து கூறினோம்.

குறிப்பாக இடமாற்றம், தண்டனைகள், ஊதிய முரண்பாடுகள் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தான் தீர்வு காண முடியவில்லை. உதாரணமாக, நீலகிரி மாவட்ட போலீசார் இடமாற்றம் கேட்டால், அங்கு போலீசார் எண்ணிக்கை என்பது குறைவாக தான் இருக்கும். அவர்களுக்கு இடமாற்றம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு அரசு தான் தீர்வு ஏற்படுத்த முடியும். இதுபோன்ற பல பிரச்னைகளை எடுத்துக் கூறினோம். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக முதல்வர் உறுதி அளித்தார். இதன் மூலம் 800 போலீசார் வரை பலனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: