2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த உ.பி-யில் பீகார் முதல்வர் நிதிஷ் போட்டி?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி

லக்னோ: வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரபிரதேசத்தில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் பீகார் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் நிதிஷ்குமாரும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லல்லன் சிங் அளித்துள்ள பேட்டியில், ‘2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர், புல்பூர் அல்லது அம்பேத்கர் நகர் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் நிதிஷ் குமார் போட்டியிடலாம்’ என்று கூறினார். இவரது பேச்சு உத்தரபிரதேச அரசியலில் பாஜகவின் சூட்டை அதிகரித்துள்ளது. உண்மையில், படேல் சமூகத்தினரின் வாக்கு வங்கி பாஜகவுக்கு சாதகமாக இல்லை. எனவே அந்த சமூக வாக்குகளை நிதிஷ் குமார் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமாரை பொருத்தவரை அவர் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். பீகார் எல்லை மாவட்டங்களான காஜிபூர், பல்லியா, வாரணாசி, மிர்சாபூர், சோன்பத்ரா, அலகாபாத் ஆகியவற்றில் படேல் சமூக மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 30 எம்எல்ஏ தொகுதிகளில் படேல் சமூக மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தனது பீகார் செல்வாக்கை பயன்படுத்தி உத்தரபிரதேச படேல் சமூக மக்களின் வாக்கை பயன்படுத்த நிதிஷ்குமார் முயன்று வருகிறார். ஃபுல்பூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

காலப்போக்கில் காங்கிரஸின் நிலைமை மோசமானதால், இந்த ெதாகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையானது. சில தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது. சமீபத்தில் நடந்த உத்தரபிரதேச தேர்தலில் படேல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் சிரத்து தொகுதியில் போட்டியிட்டு தற்போதைய பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தோற்றார். இவரது தோல்வி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அதனால் படேல் சமூக மக்களின் வாக்குகளே வெற்றிகளை தீர்மானிக்கும் என்பதால், வருகிற லோக்சபா தேர்தலில் நிதிஷ் குமாரின் கவனம் உத்தரபிரதேச மாநிலம் பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. சமாஜ்வாதி கட்சி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் ஓரணியில் நின்றால், நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகும் என்கின்றனர்.

Related Stories: