காரியாபட்டியில் அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்-வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை

காரியாபட்டி : காரியாபட்டியில் தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் அண்ணா பஸ்நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 120க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பான்மையோர் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைக்கான பொருட்களை வாங்க காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர். மேலும், காரியாபட்டியில் யூனியன் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால், நகருக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மதுரை, கல்லுப்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி, திருப்புவனம், தேனி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ்கள் காரியாபட்டி பஸ்நிலையம் வந்து செல்கின்றன. இந்நிலையில், காரியாபட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் அதிகமான பஸ்கள் வந்து செல்கின்றன.

பஸ் நிலையத்திற்குள் 7 பஸ்கள் மட்டுமே நிற்க முடியும். மற்ற பஸ்கள் ஒரே நேரத்தில் வந்தால் பஸ் நிலையத்திற்கு வெளியே சாலைகளில் தான் நின்று செல்கிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒரு சில நேரங்களில் பஸ்களை தவறவிட்டு விடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக காரியாபட்டி பேரூராட்சி அதிமுக வசம் இருந்த நிலையில், எந்த விரிவாக்க பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே காரியாபட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என காரியாபட்டி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: