கம்பத்தில் கொத்தமல்லி விலை அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் : கம்பம் சந்தையில் கொத்தமல்லி வரத்து குறைவால், சந்தையில் மல்லியின் விலை கிலோ 120 ரூபாயாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள அனைத்து வீட்டு சமையலிலும் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை இல்லாத உணவு வகை இல்லை எனலாம். உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இவைகள் மருத்துவ குணங்களை கொண்டது.

இதில் கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனால் தேனிமாவட்டத்தின் பல பகுதியில் சிறு, குறு விவசாயிகள் குறுகிய காலப்பயிரான கொத்தமல்லி போன்றவற்றை கிணற்றுப்பாசனம் மூலமாகவும், சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் விவசாயிகள் சாகுபடி செய்து வருமானம் பார்த்து வருகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த மல்லி விவசாயத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மல்லியில் கருகல் ஏற்பட்டு வரத்து குறைந்துள்ளது.

மழையினால் ஒரு ஏக்கருக்கு ஆறு டன் வரை வரவேண்டிய மல்லி மூன்று டன் வரை குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ 10 ருபாய்க்கு விற்கப்பட்ட மல்லி வரத்து குறைவால் சந்தையில் தற்போது கிலோ ருபாய் 120 ருபாய் வரை விற்கப்படுகிறது. வியாபாரிகள் விவசாயிகளிடம் மல்லி கிலோ ரு 80 வரை எடுக்கின்றனர். வரத்து குறைந்தபோதும் மல்லி விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கீரைக்காக கொத்தமல்லியை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.மல்லி அதிக வெயிலில் தழையாது. நிழற்பாங்கான இடத்தில் தான் வளரும். இதனால்தான் ஐந்து மாத வாழைக்கு இடையில் கொத்துமல்லியை விதைக்கின்றனர். இதன் அதிக பட்ச வயது 50 நாட்கள் மட்டுமே. வளமான நிலங்களில் 45 நாட்களிலே அறுவடைக்கு வந்துவிடும்.மழைகாலம் மற்றும் பனிக்காலத்தில் மல்லி கருகிக்கொண்டு வரும். தற்போது வரத்து குறைவு என்பதால் உழவர் சந்தைகளில் கிலோ ரூபாய் 120 வரை விலை போகிறது’’ என்றார்.

Related Stories: