4 நாட்களில் தசரா பண்டிகை தொடக்கம் நெல்லையில் விற்பனைக்கு குவிந்துள்ள அம்மன், கொலு பொம்மைகள்-ரூ.80 முதல் ஆபரணங்கள், வேடப்பொருட்கள்

நெல்லை : தசரா பண்டிகை அடுத்த 4 நாட்களில் தொடங்க உள்ள நிலையில்  நெல்லையில் கொலு பொம்மைகளுடன் சரஸ்வதி அம்பாள் உள்ளிட்ட அம்மன் பொருட்கள்  மற்றும் அணிகலன்கள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. மைசூர்,  குலசைக்கு அடுத்தபடியாக பாளையில் நடைபெறும் தசரா விழா மிகவும் சிறப்பு  வாய்ந்தது. பாளையில் 10ம் திருநாளில் நாளில் 12 சப்பரங்கள் மின்னொளியில்  அணிவகுக்கும். இதுபோல் நெல்லை டவுன் பகுதியில் 35 அம்பாள் சப்பரங்கள்  அணிவகுக்கும். டவுன் பகுதி சப்பரங்கள் நெல்லையப்பர் தேரடி திடலில் சக்தி  தரிசன காட்சி அளிக்கும். அப்போது ஒரே நேரத்தில் தீபாராதனை நிகழ்ச்சிகள்  நடைபெறும்.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதால், 2  ஆண்டுகளுக்கு பின்னர் தசரா   பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.  பாளை பகுதியில் தசரா பண்டிகைக்காக கடந்த ஆவணி மாத அமாவாசை நாளிலேயே  கால்நாட்டு வைபவம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம்  மேற்கொண்டு தினமும் அம்பாளை தரிசித்து வருகின்றனர்.

வருகிற 25ம்தேதி ஞாயிறன்று  புரட்டாசி அமாவாசை தினத்தை தொடர்ந்து நவராத்திரி வைபவம் நடக்க உள்ளது.  திங்கட்கிழமை முதல் அம்பாள் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து  வழிபடுவார்கள். இதற்காக இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை கடந்த  வாரமே களைகட்டத் தொடங்கியுள்ளது. பூம்புகார் விற்பனை நிலையத்தில் 10 சதவீத  சிறப்பு தள்ளுபடியில் கொலு பொம்மைகள் விற்பனை நடக்கிறது.

இதுபோல்  நெல்லை டவுன் சுவாமி சன்னதி உள்ளிட்ட கடைகளில் கொலு பொம்மைகள், வேடம்  அணியும் பக்தர்களுக்கான உபகரணங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடும்  அம்மன் சிலைகள், அவற்றிற்கான உபகரணங்கள் நேற்று விற்பனைக்காக குவிந்துள்ளன. குறிப்பாக அம்மன் அலங்கார பொருட்களாக கிரீடம். சடைமுடி,  கல்பதித்த ஆபரணங்கள் போன்றவை சென்னையில் இருந்தும், கொலுபொம்மைகள்  தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன.

  இதுபோல் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரஸ்வதி அம்பாள் முழுஉருவ  சிலை மர இருக்கையுடன் வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளை நிறம்  மட்டுமின்றி இந்த ஆண்டு தங்க நிறத்திலான அம்பாள் உருவ சிலைகள் வந்துள்ளதாக  வியாபாரி ராஜா தெரிவித்தார். ஆபரணங்கள் ரூ.80 முதல் ரூ.550 வரை  விலையில் உள்ளன. அனைத்தும் இணைந்த அம்பாள் உருவ பொம்மை ரூ.3500 விலையில்  விற்பனையாகிறது. கடந்த ஆண்டைவிட சில பொம்மைகள் விலை 10 முதல் 20சதவீதம்  வரை உயர்ந்துள்ளது. ஆயினும் விற்பனை ஜோராக நடக்கிறது.

Related Stories: