மயிலாடுதுறை, குத்தாலத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்ற 29 கடைகளுக்கு சீல், 6 பேர் கைது-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், குத்தாலம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் குத்தாலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான அஞ்சாறுவார்த்தைகளை,திருவாலங்காடு, மல்லியம்,கீழவெளி உள்ளிட்ட பகுதிகளில் 51 கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அதில் 7 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா வகையிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.10000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த 7 கடைகளுக்கும் சீல் வைத்தும் விற்பனை செய்த 6 நபர்களை குத்தாலம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன்,எஸ் பி தனிப்பிரிவு காவலர் மனோகர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் குத்தாலம் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதே போல மயிலாடுதுறையில் நடைபெற்ற சோதனையில் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட போலீசார் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்து, கடைகளிலிருந்து குட்கா, ஹான்ஸ் ஆகியவற்றை  பறிமுதல் செய்து, விற்பனை செய்த  22 கடைகளுக்கு சீல் வைத்தனர். அப்போது நகராட்சி அதிகாரிகள்,அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: