நிலநடுக்க நினைவு நாளில் மெக்சிகோவில் பயங்கர பூகம்பம்: 7.4 ரிக்டராக பதிவு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பூகம்ப நினைவு நாளில், 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். மெக்சிகோவில் கடந்த 1985ம் ஆண்டு  செப்டம்பர் 19ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதேபோல்  2017ம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தில் சுமார் 350 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தின் நினைவு தினமான நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ சிட்டியில் அவசரகால பேரிடர் பயற்சிகள் நடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் நிலநடுக்க எச்சரிக்கை மணி ஒலித்ததால் பொதுமக்கள் மீண்டும் வீடுகளைவிட்டு வெளியேறினார்கள். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related Stories: