சாதிய பாகுபாடு புகார்: பாஞ்சாகுளம் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஊர் கட்டுபாடு எனக்கூறி கடை உரிமையாளர் தின்பண்டம் கொடுக்க மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை உரிமையாளர் மகேஷ்வரன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சாதிய பாகுபாடு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனால் பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று திடீரென பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது மொத்தம் உள்ள 23 மாணவர்களில் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வங்கி கணக்கு இணைப்பு பெறுவதற்காக சங்கரன்கோவில் சென்று விட்டதால் அவர்கள் வரவில்லை. ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் அன்றாட நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் விசாரணை நடத்தினார்.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ‘பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் எதுவும் இல்லை. பள்ளி தொடர்பாக புகார் கூறியது ஆதாரமற்றது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமி பள்ளிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவங்களின் அடிப்படையில் சாதிய பாகுபாடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: