சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தடையை மீறி கூட்டம் நடத்தியது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 31ம் தேதி நவராத்திரி மண்டபத்தில் எவ்வித முன் அனுமதியின்றி கூட்டம் நடந்தது.
கோயில் வளாகத்தில் கோயில் நிகழ்ச்சிகளை தவிர வேறு காரணங்களுக்காக கூட்டம் போடக்கூடாது என்பது விதி. ஆனால் இந்த விதிகளை மீறி சென்னை மாநகராட்சி 133வது வார்டு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த், ஐகோர்ட் வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் 75 பேர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கோயில் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை உடனே தட்டிக்கேட்க வேண்டும் என்றும், கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் காவேரி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் கோயில் வளாகத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கோயில் வளாகத்தை கூட்டம் நடத்த பயன்படுத்தியதாக பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்ட 75 பேர் மீது ஐபிசி 143(சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல்), 150(சட்டவிரோதமாக ஆட்களை சேர்த்தல்), மாநகர காவல் சட்டம் பிரிவு41(6),(எ)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தடையை மீறி கோயில் வளாகத்தில் கூட்டம் நடத்திய பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வழக்கறிஞர் வெங்கடேஷ், பாஜ நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.