மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை கைதிகளுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி

வேலூர்: மத்திய மற்றும் பெண்கள் சிறைகளில் உள்ள தண்டனை கைதிகளுக்கு ஆன்லைனில் ஒரு மாத யோகா பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வேலூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 மத்திய சிறைச்சாலைகள், வேலூர், புழல் உள்ளிட்ட 5 பெண்கள் தனிச்சிறைகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆயிரம் கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக சிம்ம க்ரியா என்ற பயிற்சியும், உடல், மனம் ஆகியவை அமைதியாகவும் சமநிலையிலும் இருப்பதற்காக யோக நமஸ்காரம் உள்ளிட்ட பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்தாண்டு மத்திய, பெண்கள் தனிச்சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் ஒரு மாத யோகா பயிற்சி ஆன்லைனில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியில் கைதிகளுக்கு யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எடுத்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறைகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கைதிகளுக்கு ஏற்கனவே தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு கைதிகளுக்கு யோகா கற்று தரப்படுகிறது. உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருமுகப்படுத்துவதே யோகா. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு கைதிகளுக்கு யோகா உதவியாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: