அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட கோட்டங்களில் ரூ.1,103 கோடியில் மின் புதைவட பணி: உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வீடு, வணிகம், தொழிற்சாலை, விவசாயம், குடிசை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3.24 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன. இயற்கை சீற்றங்களில் எளிதாக இவை சிக்கி கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. இதற்கு இங்கு மற்ற இடங்களை விட புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதே காரணம்.

குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு வீசிய ‘நிஷா’ புயல்; 2010ம் ஆண்டு வீசிய ‘ஜல்’ புயல், 2011ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயல்; 2012ம் ஆண்டு வீசிய ‘நீலம்’ புயல்; 2016ம் ஆண்டு வீசிய ‘வர்தா’ புயல்; 2017ம் ஆண்டு வீசிய ‘ஒக்கி’ புயல்; 2018ம் ஆண்டு வீசிய ‘கஜா’ புயல்; 2020ம் ஆண்டு வீசிய ‘நிவர்’ புயல்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களின் போது சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் உடைந்து விழுந்தது. இதனால் ஏராளமான மின்கம்பங்கள் சாயந்தன. முற்றிலும் மின்விநியோகம் தடைபட்டது. சில கிராமங்களில் சாப்பாடு, மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டன.

எனவே இதனை தடுக்கும் வகையில் சென்னை மாநகர பகுதிகளில் மேல்நிலை மின்கம்பி பாதைகளை புதைவடங்களாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மட்டும் அல்லாது டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் இம்முறையில் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. ரூ.1,103 கோடி செலவில் அம்பத்தூர், அண்ணாநகர், போரூர், கிண்டி மற்றும்  கே.கே.நகர் பகுதிகளில் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:  விபத்துக்களை தடுக்கும் வகையிலும் சீரான மின்விநியோகம் வழங்கும் வகையிலும் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரம்பூர் கோட்டத்தில் ரூ.210 கோடி செலவில் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணி முடிவடைந்திருக்கின்றன. இதனைத்தொடர்ந்து ரூ.133 கோடி செலவில் தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய கோட்டங்களில் இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.1,103 கோடியில் அம்பத்தூர், அண்ணாநகர், போரூர், கிண்டி மற்றும் கே.கே.நகர் ஆகிய கோட்டங்களில் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: