ஆகாயத்தாமரை, கருவேல மரங்களால் புதர்மண்டி காணப்படும் செம்பரம்பாக்கம் ஏரி: பருவ மழைக்குள் சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடும் கோடை காலத்திலும் கூட நீர் வற்றாமல் ஆண்டுதோறும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சென்னை மக்கள் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற மக்களுக்கு தாகம் தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வழித்தடங்கள் மற்றும் உபரிநீர் கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை விரிவு படுத்தும் பணிகளை மேற்கொண்டது.

மேலும், மழைக் காலங்களில் வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, சிக்கராயபுரம் கல்குவாரியில் நீரை தேக்கி வைக்க, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக உபரிநீர் தங்கு தடையின்றி சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைக்கு சென்றடையும் வகையில் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஏரி குடிநீர் ஆதாரம் மட்டுமின்றி, சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து ரம்யமாக காட்சியளிக்கும் ஏரியின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.

மேலும், சுற்றுப்புற கிராமவாசிகளின் மீன்பிடி தளமாகவும் இந்த ஏரி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஏரிக்கரை முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. ஏரிக்கரையை சுற்றி சீமை கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. நீர்பிடிப்பு பகுதியில் ஆகாய தாமரை செடிகளும் படர்ந்துள்ளது. எனவே, பருவ மழை தொடங்குவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் புதர்போல் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்றி ஏரியை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: