கஜகஸ்தான் தலைநகரின் பெயர் மீண்டும் மாற்றம்; பழையபடி அஸ்தானா ஆனது

மாஸ்கோ: கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் மீண்டும் பழையபடி அஸ்தானா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து 1991ல் சுதந்திரம் பெற்ற கஜகஸ்தான் தனது தலைநகரை அல்மாட்டியில் இருந்து அஸ்தானாவுக்கு மாற்றியது. சுமார் 30 ஆண்டாக அதிபராக நூர்சுல்தான் நாசர்பயே ஆட்சி செய்தார். கடந்த 2019ல் அவரது அரசியல் வாரிசான காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அதிபராக பொறுப்பேற்றார். அவர் தலைநகர் அஸ்தானாவின் பெயரை நூர் சுல்தான் என கடந்த 2019ல் மாற்றினார். இதற்கிடையே, வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் கஜகஸ்தானில் டோகாயேவ் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர்.

இதனால் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களில் பொதுமக்கள் 200 பேர் பலியாகினர். இதனால், அரசியல், சமூக சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அதிபர் டோகாயேவ் ஒப்புக் கொண்டனர். முதற்கட்டமாக தலைநகரின் பெயரை மீண்டும் அஸ்தானாவாகவும், அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கவும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதில் அதிபர் டோகாயேவ் நேற்று கையெழுத்திட்டார். அதிபர் பதவிக்கு ஒரே நபர் 2 முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: