தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் தவறில்லை. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் உச்சத்தில் இருந்தபோது, சென்னை வானகரத்தில் ஜூலை 20ம் ேததி அதிமுக பொதுக்குழு கூடியது. அதே நேரத்தில் ஒற்றைத் தலைமை கருத்தை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் பூட்டியிருந்த அதிமுக அலுவலக கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கே ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் போட்டி கூட்டம் நடத்தினார். முன்னதாக ஓபிஎஸ் தரப்பினரை அலுவலகத்துக்கு விடாமல் இபிஎஸ் அணியினர் தடுத்தபோது 2 தரப்புக்கும் இடையில் மோதலும் கலவரமும் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

அதற்குள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து அதிமுக தலைமை அலுவலக புகாரின் பேரிலும், ராயப்பேட்டை போலீசார் அளித்த புகாரின்படி இரு தரப்பிலும் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுவரை அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்னையில் எடப்பாடி-ஒபிஎஸ் மட்டுமில்லாமல், தொண்டர்களும் நிர்வாகிகளும் அரசியல் ரீதியாக மோதிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெரியாரின் 144வது பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் நேற்று மரியாதை செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பண்ருட்டி  ராமச்சந்திரன் தியாகத்தை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அவர் பெரியார்,  அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் பயணித்தவர். பண்ருட்டி ராமச்சந்திரனை உலகத்திலேயே உச்ச அமைப்பாக இருக்கக்கூடிய ஐநா சபைக்கு  சென்று உரையாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் கட்டளையிட்டு, அங்கு சென்று உரையாற்றிய  பெருமையை அதிமுகவுக்கு பெற்றுத்தந்தவர். அரசியல்  காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலபேர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவர் ஆற்றிய தொண்டை, தியாகத்தை எண்ணி  செயல்பட வேண்டும். பல கூட்டங்களில் மனம் விட்டு, உள்ளத்தில் உள்ளதை  ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதிமுகவில் ஜெயலலிதா  கூறியதுதான் வேதவாக்கு. மற்றவர்கள் கூறுவது என்ன வாக்கு என்று மக்களுக்கு  தெரியும். இதை அதிமுக தொண்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலை,  அதிமுகவை தொடங்கியபோதே எம்ஜிஆர் ஏழை, எளிய, தொண்டர்களுக்காக உருவாக்க  வேண்டும் என்றுதான் தொடங்கினர். அதிமுகவின் தலைமை பீடத்தில் யார் அமர  வேண்டும் தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள் முன்னாள் அமைச்சர்கள்  வீடுகளில் சோதனை நடைபெறுவது குறித்து கேட்கிறீர்கள்.

தமிழக அரசு அவர்களது  கடமையை செய்கிறது. தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அவர்கள்தான்  நிரூபிக்க வேண்டும். அந்த கடமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருக்கிறது. ஜெயலலிதா, இரண்டு முறை எனக்கு முதல்வர் பதவி தந்துள்ளார். ஜெயலலிதாவோடு 21  ஆண்டுகள் உடன் இருந்து ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் பயணித்து  இருக்கிறேன். ஜெயலலிதா எண்ணத்தின்படி விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றி  இருக்கிறேன். தலைவன் நிலைக்கு என்றைக்கும் சென்றது இல்லை. தொண்டனாகவே  பயணித்து இருக்கிறேன். எம்ஜிஆர் என்ன நோக்கத்திற்காக கட்சியை தொடங்கினாரோ,  ஜெயலலிதா என்ன நோக்கத்திற்காக கட்சியை வளர்த்தாரோ அந்த அடிப்படை  எந்தவிதத்திலும் சிதைந்துவிடக்கூடாது. அதை காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களை  போன்ற அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் நடத்தி வரும் சோதனைகள் குறித்து, அக் கட்சியை சேர்ந்த ஓபிஎஸ்சே இதுபோல் பரபரப்பாக பேட்டியளித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: