வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று தொடக்கம்: புகார் தெரிவிக்க குடிநீர் வாரியம் அழைப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று முதல் தொடங்குவதால், பொதுமக்கள் புகார் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15  மண்டலங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 71 கி.மீ. நீளமுள்ள மழைநீர்  வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் புதிதாகவும்  மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால் பணிகளின்  முன்னேற்றம் மற்றும் பருவமழையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்த  மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது.

அதில், ஒவ்வொரு  பகுதியிலும் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன்  அந்த மழைநீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக  அகற்ற வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு  அவை உடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொட்ட வேண்டும். கடந்த  காலங்களில் மழைநீர் தேங்கும் 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த  இடங்களில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீரை வெளியேற்றும் வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் குதிரை திறன் கொண்ட 200 மோட்டார்  பம்புகள், குறைந்த திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகள் என மொத்தம் 400  மோட்டார் பம்புகள் உள்ளன. இந்த இடங்களில் மழைநீர் வெளியேற்றும் மின்  மோட்டார் பம்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

மாநகராட்சியால்  பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை  தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும். மழைநீர் தேங்காமல்  வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகளை உடனடியாக பராமரிப்பு  பணிகளை மேற்கொண்டு அவற்றை இயக்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து  வகையான உபகரணங்களையும் முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்க  வேண்டும். புதியதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள், அதில்  இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்களில்  அடைப்புகள் ஏதுமின்றி மழைநீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து  மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் தங்கு தடை  இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மழைக்காலங்களில்  பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், தொடர்புடைய அலுவலர்களை தொடர்பு  கொள்ளவும் மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள்  அடங்கிய கையேட்டை தயார் செய்ய வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக கழிவுநீர் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும்  பணிகள் இன்று முதல் தொடங்குவதால், பொதுமக்கள் புகார் தெரிவித்து குறைகளை  நிவர்த்தி செய்யலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம்-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று (16ம் தேதி) முதல் தொடங்கி வரும் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.   இந்த பகுதி அலுவலகங்களுக்குட்பட்ட 1,998 தெருக்களில் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*புதியதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள், அதில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்புகள் ஏதுமின்றி மழைநீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

*876 தெருக்களில் தூர்வாரும் பணி

சென்னை குடிநீர்  வாரியத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் கழிவுநீர்  கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மொத்தம் 200 பணிமனைகளில் இரவு நேரங்களில் கழிவுநீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை அகற்றும் பணியில் 350 உதவி பொறியாளர்கள் மற்றும் 2 ஆயிரம் களப்பணியாளர்கள்  தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 ஆயிரத்து  876 தெருக்களில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும்  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 6 ஆயிரத்து 367 எந்திர நுழைவாயில்கள்  தூர்வாரப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

*தினசரி 912 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் கடந்த 4 நாட்களாக 302 கழிவுநீர் நீரேற்றும் நிலையங்கள் மூலம் 24 மணி நேரமும்  கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  பருவமழைக்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 580 எம்.எல்.டி. அளவிலான  கழிவுநீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பருவமழை காரணமாக தற்போது நாளொன்றுக்கு 912 எம்.எல்.டி. வரையிலான கழிவுநீர்  சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

*142 ஜெட்ராடிங் இயந்திரங்கள்

தூர்வாரும் பணிகளில், 54 நீர் உறிஞ்சும் வாகனங்கள்,  கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை  சரிசெய்வதற்காக 142 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள்  மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்  இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள  ஏதுவாக 260 தூர்வாரும் ஆட்டோக்கள் கழிவுநீரினை அகற்றும் பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: