ஓபிஎஸ் சந்தித்ததன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரனால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார் கருத்து

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்ததால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாவிற்கு சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் பதில் அளிப்பார். ஆனால் இங்கே அதை எல்லாம் அடக்குமுறைகள் மூலமே செய்யப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்வாரா. இதனால் என்ன தாக்கம் ஏற்படும். அதனைத்தான் பார்க்க வேண்டும். இதனால் எந்த தாக்கமும் அரசியலில் ஏற்படப்போவதில்லை. ஜெயலலிதாவை பார்ப்பது போல் என்னை பார்க்கிறார்கள் என்று சசிகலா  சிரிக்காமல் சொல்வார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதாக எடுத்து கொள்ள வேண்டும். மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: