பரந்தூர் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் ஒப்புதலோடு நிலம் எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் ஒப்புதலோடு நிலம் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்து இருக்கிறது. விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: