விருதுநகரில் இன்று திமுக முப்பெரும் விழா விருதுகளை வழங்கி ஸ்டாலின் சிறப்புரை: லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்

விருதுநகர்: விருதுநகரில் இன்று மாலை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பாவேந்தர் விருதுகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவுக்காக இன்று காலை விருதுநகர் வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில், பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் என திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. விழா திடலின் முகப்பில் கலைஞர், அண்ணா, பெரியார் முகங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபம் ஏந்திய நிலையில் இருக்கும் சிற்பங்கள் வடிவிலான ெசட், மலை முகப்புடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடைக்கு செல்ல 3 நுழைவாயில்களும், அதன் உள்பக்கம் மாளிகை போன்ற முகப்பும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்கின்றனர். 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் துவங்கி சாலையின் இருபுறம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 5 ஆயிரம் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட எல்லை முதல் சாத்தூர் வரை 21 கிமீ தூரத்திற்கு திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. திமுக முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகளை வழங்கி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். நிறைவாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு நன்றியுரை நிகழ்த்துகிறார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 6 மாடிகளுடன் ரூ.70.57 கோடியில் கட்டப்பட உள்ள, புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளுக்கு இன்று காலை 10.30 மணியளவில் அடிக்கல் நாட்டினார்.

யார், யாருக்கு விருது?

திமுக முப்பெரும் விழாவின் ஒரு பகுதியாக சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது, கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது, கழக பொருளாளர் டி.ஆர்.பாலுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது பட்டயம், பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதையடுத்து கலைஞர், தொண்டர்களுக்கு முரசொலியில் எழுதிய 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்களை கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பினை வெளியிடுகிறார்.

முதல்வருக்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு

முதல்வருக்கு மாவட்ட எல்லையில் உள்ள உசிலம்பட்டி மற்றும் சத்திரரெட்டியபட்டி, பிஆர்சி, கலெக்டர் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக கொடியேந்திய தலா 5 ஆயிரம் தொண்டர்களுடன், செண்டை மேளம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: