ராயபுரம் 52வது வார்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் கலந்தாய்வு கூட்டம்: ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம் 52வது வார்டில் நேற்று முன்தினம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நடந்து வரும் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு 52வது வார்டு கவுன்சிலர் கீதா சுரேஷ் தலைமை தாங்கினார். இதில், ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, 5வது மண்டல பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ், ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்பட மாநகராட்சியின் பல்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது: 52வது வார்டில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இங்கு மழை காலத்தின்போது சுரங்கப் பாலத்தில் தேங்கும் மழைநீரை அகற்ற, புதிய மின்மோட்டார்களை வாங்க வேண்டும். இங்குள்ள 3 வார்டுகளில் நகர்ப்புற மேம்பாட்டு துறை சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் வசிப்பவர்கள் காலி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் ரூ.24 ஆயிரத்தை கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்குள்ள தெருக்களில் மழைநீர் தேங்காதவாறு இருப்பதற்கான நடவடிக்கை மற்றும் சீரான மின் வினியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயபுரம் தொகுதியில் கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். 52வது வார்டில் குப்பை தொட்டிகளில் சேகரித்து முறையாக அகற்ற வேண்டும். இதுகுறித்து மக்களிடையே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் முக்கிய சாலைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல் ராயபுரம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அங்குள்ள பிரச்னைகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பகுதி திமுக செயலாளர் வா.பே.சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: