ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கூரியரில் கள்ளநோட்டுகளை வரவழைத்த வாலிபர் கைது: ரூ.21,500 மதிப்பு கள்ளநோட்டுகள் பறிமுதல்

வேளச்சேரி: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்திற்கு ஐதராபாத்தில் இருந்து வேளச்சேரி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (30) என்பவரின் பெயரில் ஒரு பார்சல்  வந்தது. அந்த பார்சலில் பணம் இருப்பதாக ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் நம்பரில் பேசி அந்த வாலிபரை அலுவலகத்திற்கு அழைத்தனர். அவர் வந்து பார்சலை பார்த்து விட்டு, தனக்கு இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் அவரை போகவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பார்சலை ஸ்கேன் செய்தபோது   அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.   

இதையடுத்து கூரியர் அலுவலக ஊழியர்கள் சம்பவம்  குறித்து கிண்டி காவல் உதவி ஆணையர் சிவாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில் தனிப்படையினர் கூரியர் அலுவலகத்திற்கு சென்று  பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தனர், அப்போது அதில் ரூபாய் நோட்டுகள்  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பார்சலை பிரித்து பார்த்தபோது எட்டு ரூ.200 கள்ளநோட்டுகள், ரூ.100 கள்ள நோட்டுகள் 69 என மொத்தம் ரூ.8500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. பின்னர் கூரியர் பார்சலில் உள்ள தொடர்பு எண்ணை வைத்து பார்த்தபோது அது பார்சல் வாங்காமல் ஓடிய சதீஷ் என்பதை உறுதி செய்தனர். அவரை கைது செய்த தனிப்படையினர் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது  பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சதீஷ் ஐதராபாத்தை சேர்ந்த சுஜித் என்பவரிடம் இன்ஸ்டாகிராமில் பழகி உள்ளார். பின்னர் அவர் வாட்ஸ்அப்பில் பேசி ரூ.1000  ஜிபே வழியாக அனுப்பினால் ரூ.5000 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மூன்று முறைக்கு மேல் ஜிபே மூலம் ரூ.8,500 வரை  தொடர்ந்து  பணத்தை அனுப்பி ரூ.21,500 வரை பணத்தை பெற்றது தெரியவந்தது. அவரிடமிருந்து, முன்னதாக பார்சலில் பெற்ற ரூ.500 கள்ள நோட்டுகள் 26 என மொத்தம் ரூ.13,000 உள்பட ரூ.21,500 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து சதீஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: