கோவில்பட்டியில் வேனில் புகையிலை கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது-பெங்களூருவில் இருந்து கொண்டு வந்தபோது சிக்கினர்

கோவில்பட்டி : கோவில்பட்டியில் வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. அவ்வப்போது புகையிலை பொருட்கள் பிடிபட்டு அவற்றை கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டாலும் புகையிலை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் எஸ்பி இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, எஸ்ஐ பிரெட்ரிக்ராஜன் ஆகியோர் தலைமையில் ஏட்டுகள் கோவில்பட்டி மணிகண்டன், சாத்தான்குளம் மணிகண்டன், ஸ்ரீவைகுண்டம் முதல்நிலை காவலர் கார்த்திக், விளாத்திகுளம் காவலர் பிரபுபாண்டியன், ஆயுதப்படை காவலர் முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேன் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக எஸ்பி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், நேற்று கோவில்பட்டி புதிய பஸ்நிலையம் முன், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 4 மூடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வேனில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள், கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் (63), கோவில்பட்டி புதுரோடு 1வது தெருவைச் சேர்ந்த ஹரிஹரசுதன் ஆழ்வார் மகள் ரோகிணி (38) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து மாவட்டம் முழுவதும் சப்ளை செய்வதும் தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: