விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைய முயன்ற சி.வி.சண்முகத்தை கைது செய்ய வேண்டும்: பெங்களூரு புகழேந்தி வலியுறுத்தல்

சென்னை: ரெய்டு நடக்கும் இடத்தில் எம்எல்ஏக்களுக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய பெங்களூரு புகழேந்தி, விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைய முயன்ற சி.வி.சண்முகத்தை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கூறியதாவது: இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வேலுமணியின் ஜாமீனை ரத்து செய்துவிட்டது. ஏற்கனவே சிபிஐ, விஜயபாஸ்கர் மீது எப்ஐஆர் போடச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. இப்படிப்பட்ட ஊழலில் ஈடுபட்ட மிக மோசமான ஊழல் பேர்வழிகள் தான் இவர்கள் இருவரும்.

உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் ஏமாற்றி கொசுமருந்து அடிப்பது, லைட் போடுவது என எல்லா விதத்திலும் கொள்ளையடித்த கூட்டம் தான் எடப்பாடியும், வேலுமணியும் சேர்ந்து அடித்த கொள்ளை.  திமுக தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது. இது தான் உண்மை. ரெய்டு நடக்கிற இடத்தில் எம்எல்ஏக்களுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் என்ன வேலை. காவல்துறை நினைத்திருந்தால் தூரத்திலேயே ஒரு பேரிகார்டை வைத்து தடுத்திருக்க முடியும். ஒவ்வொரு முறையும் ரெய்டு நடக்கும்போது அங்கே கூட்டமாக கூடுவதும், இவர்கள் கலாட்டா செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது காவல்துறை கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் கைது செய்யப்படவில்லை.

 

மேலும் அசிங்கமான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதை காவல்துறை வேடிக்கை பார்க்கக் கூடாது. உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். தப்பவே முடியாது. அதுவும் மருத்துவ துறையில் என்ஓசி கொடுப்பதற்காக விஜயபாஸ்கர் எப்படி எல்லாம் லஞ்சம் பெற்றார் என்பது வெளிவரத்தான் போகிறது. இனியும் தாமதம் செய்யாமல் தமிழக அரசு அவர்களை கைது செய்ய வேண்டும். இதுவரை எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை பாயவில்லை. ஏன் அவரை விட்டு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. ரெய்டு நடக்கும் இடத்துக்குள் நுழைய முயன்ற சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்ய வேண்டும். எப்படி ஜெயக்குமாரை லுங்கியுடன் அழைத்து சென்றார்களோ அதேபோன்று சி.வி.சண்முகத்தையும் அழைத்து சென்றால் தான் அவருக்கு புத்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: