ராகுல் நடைபயண நிதி வசூலில் முறைகேடு விவகாரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் மோதல்: கணக்கு கேட்க டெல்லி மேலிடம் திட்டம்

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவர், 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தற்போது ேகரளாவில் பயணம் தொடர்கிறார். தமிழகத்தில் அவரது நடைபயணத்தை பிரமாண்டமாக நடத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. இதை கட்சி தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் பங்கெடுத்து செய்தனர்.

இதுதவிர, கட்சியில் உள்ள தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் என பலரிடமும் பெருமளவில் நிதியை வாங்கி குவித்தனர். அப்படி இருந்தும் செலவு தொகை அதிகமானதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு நிதி பெற்றும் மீதமில்லாமல் போனது கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு காரணம், வசூல் செய்த நிதியில் முறைகேடு நடந்ததுதான் என்று கட்சி நிர்வாகிகள் புகார் எழுப்பியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மூத்த துணை தலைவர் ஒருவர் கட்சி நிதியில் முறைகேடு செய்ததாக சக நிர்வாகி ஒருவரிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த தகவல் சம்பந்தப்பட்டவருக்கு சென்றதால் அவர் சமூக வலைதளத்தில் ஜோதிமணிக்கு நேரடியாக சவால் விட்டு பதிவு போட்டுள்ளார். குற்றத்தை நிரூபித்தால் அடுத்த நொடியே துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் அதிக அளவில் வசூல் செய்து முறையாக செலவு செய்யவில்லை என்றும், பணத்தை வாரி சுருட்டியுள்ளனர் என்பதுதான் ஜோதிமணி எம்பியின் குற்றச்சாட்டாக உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்பிக்கும், மாநில துணை தலைவருக்கும் இடையே எழுந்துள்ள மோதல் விவகாரம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வலைதள பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினரும், மற்றவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருவதால் மோதல் பிரச்னை சூடுபிடித்துள்ளது. இது, காங்கிரசார் மத்தியில் அனலை கிளப்பியுள்ளதால், டெல்லி தலைமை வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. எனவே, டெல்லி தலைமைக்கு ஜோதிமணி எம்பி இதுபற்றி புகாராக தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, ராகுல் நடைபயணத்துக்காக பெறப்பட்ட நிதி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைமையிடம் வரவு- செலவு கணக்கை கேட்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: