அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: 44 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி; முக்கிய ஆவணங்கள் 3 கிலோ தங்கம் சிக்கின; எல்இடி விளக்கு டெண்டரில் ரூ.500 கோடி முறைகேடு; மருத்துவ கல்லூரி துவங்க விதி மீறி அனுமதி என வழக்குப்பதிவு

சென்னை: எல்இடி விளக்குகள் கொள்முதலுக்கான டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் முறைகேடான வகையில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழகம் முழுவதும் 44 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு எல்இடி விளக்குகள் டெண்டர் விட்டதற்கான ஆவணங்கள் மற்றும் மோசடி தொடர்பான 436 முக்கிய ஆவணங்கள், 3.10 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.51.35 லட்சம் ரொக்கம், 10 ெசாகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் எம்எல்ஏவாக உள்ளார். இவர் 2014-2021 கால கட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் அவரது வீடும் மற்றும் நண்பர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. மேலும், எஸ்.பி.வேலுமணி தனது பணிக்காலத்தில் உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டது. விளக்குகள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக டெண்டர் வழங்கியுள்ளார். அந்த வகையில் தமிழக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதைதொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பரான சந்திரபிரகாஷ், சந்திரசேகர், சீனிவாசன், ராஜன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது நண்பர்களான 9 பேருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என சென்னையில் 9 இடங்கள், கோவையில் 14 இடங்கள், திருச்சியில் 2 இடங்கள், செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி என மொத்தம் தமிழகம் முழுவதும் 31 இடங்களில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வகையில், எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார் சோதனை நடந்தது. எஸ்.பி.வேலுமணியின்அவரது அண்ணன் அன்பரசன் வீடு, கோவை அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீடு, பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீடு மற்றும் தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதிகளில் உள்ள பினாமிகளின் வீடுகள் மற்றும் சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு கோகுலாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் வேலுமணியின் ஆதரவாளர் கணேஷ்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது.

அதேபோல், தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கணபதி என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. இங்கிருந்துதான் எல்இடி பல்புகள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கடையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை நங்கநல்லூர் கணபதி தெருவில் வசித்து வரும் கட்டிட கான்ட்ராக்டரான வேலுமணியின் தீவிர ஆதரவாளர் சபேஷன்(60), பொதுப்பணித்துறை, மாநகராட்சி கான்ட்ராக்ட் மற்றும் மின்சார தெருவிளக்கு பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறார். இவரது வீட்டில் கூடுதல் எஸ்.பி.தேவநாதன் தலைமையில் சோதனை நடந்தது. அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் சபரி எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீடு என மொத்தம் தமிழகம் முழுவதும் 31 இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில், எஸ்.பி.வேலுமணி அவரது நண்பர்கள், பினாமிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் இருந்து ரூ.32.98 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் 10 சொகுசு கார்கள், மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் பினாமிகள் பெயரில் உள்ள 316 சொத்து ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து எஸ்.பி.வேலுமணி மற்றும் எல்இடி விளக்கு டெண்டர் எடுத்து நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை எம்எல்ஏவாக உள்ளார். இவர், தனது பதவி காலத்தில் குறிப்பாக 2020ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சங்காரணையில் செயல்பட்டு வரும் வேல்ஸ் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையை 150 ஆக ஆரம்பிக்க விண்ணப்பத்தின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு மருத்துவக்குழு ஆய்வு செய்து சான்று அளித்தது. அதில், தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முறைகேட்டில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் சான்றிதழ் அளித்திருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆதாரத்தின் படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டிரஸ்டி ஐசரி கணேஷ், அந்த மருத்துவ கல்லூரியின் டீன் சீனிவாசராஜ் மற்றும் மருத்துவக்கல்லூரியில் உள்கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்த அப்போதைய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன், ஆர்த்தோ பிரிவு பேராசிரியர் மருத்துவர் மனோகர், நோயியல் துறை பேராசிரியர் மருத்துவர் சுஜாதா, மருந்தியல் துறை பேராசிரியர் வசந்தகுமார் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைதொடர்ந்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர் ஐசரி கணேஷ், தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மனோகர் உட்பட 7 பேருக்கு சொந்தமான சென்னையில் 5 இடங்கள், சேலத்தில் 3 இடங்கள், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் என மொத்தம் 13 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 6 போலீசார் சோதனை நடத்தினர்.

வீட்டில் சி.விஜயபாஸ்கர் பெற்றோர் மட்டும் இருந்தனர். இதேபோல் திருச்சி கிராப்பட்டியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினருக்கு சொந்தமான எஸ்.ஏ.எஸ் பாட்லர்ஸ் நிறுவனம், சேலத்தில் அஸ்தம்பட்டி பழனியப்பாநகரில் உள்ள நோயியல் துறை பேராசிரியர் மருத்துவர் சுஜாதாவின் வீட்டில் டிஎஸ்பி ஜெய்குமார் தலைமையில் 6 பேர் சோதனை நடத்தினர். சேலம் சீரங்கப்பாளையத்தில் உள்ள ஆர்த்தோ பிரிவு பேராசிரியர் மருத்துவர் மனோகர் வீடு, சூரமங்கலம் சுப்பிரமணியநகர் பாரதி தெருவில் உள்ள மருந்தியல் துறை பேராசிரியர் மருத்துவர் வசந்தகுமாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர்.

அதேபோல், மதுரை புதூர் ஆத்திகுளம் பகுதியில் ஜவஹர்புரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் பாலாஜிநாதனின் மருத்துவமனையுடன் கூடிய வீடு, சென்னை மற்றும் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.  சென்னையை பொருத்தமட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான அடையார் எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு, கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பு வீடு, ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூவில் வசித்து வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உரிமையாளர் ஐசரி கணேஷ் வீடு, செனாய் நகர் நாதமூனி தெருவில் வசித்து வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சீனிவாசராஜ் வீடு, நந்தனம் அண்ணாசாலையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் என 5 இடங்களில் சோதனை நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  மற்றும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி உரிமையாளர், அரசு மருத்துவ குழுவில்  இருந்த 4 டாக்டர்களின் வீடுகள் என 13 இடங்களில் இருந்து மட்டும் ரூ.18.37 லட்சம்  ரொக்கம், 1,872 கிராம் தங்கம் நகைகள், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வழக்கு தொடர்பான 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐ-போன்கள், 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

* வேல்ஸ் கல்லூரியில் சோதனை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்காரணையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 2020ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு 150 மாணவர்களுடன் கல்லூரி மற்றும் 250 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக அனுமதி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆலந்தூர் டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான குழுவினர், வேல்ஸ் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மற்றும் அலுவலகம், நர்சிங் கல்லூரி உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். பல்லாவரத்தில் இயங்கி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜாய்தயாள் தலைமையில் 7 அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

* வீட்ல இருந்தது ரூ.7,500 தான்; வேலுமணி பேட்டி

கோவை சுகுணாபுரத்தில் வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், ‘‘தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது ஒரு நல்ல திட்டம். அனைத்து விளக்குகளும் மாற்றப்பட்டதால் மின்சாரம் சேமிக்கப்பட்டது. அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பொய்யான ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தி, எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3வது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். எனது வீட்டில் 7,500 ரூபாய் மட்டுமே இருந்தது. அதை எடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பணத்தை திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டு சென்றனர். எனது வீட்டில் இருந்து வேறு எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை’’ என்றார்.

* அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது

லஞ்ச ஒழிப்பு ரெய்டு பற்றி தகவல் அறிந்ததும், கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சியினருடன் குவிந்தனர். போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். கேட் முன் நின்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் அவர்கள் விலகிச்செல்லவில்லை. இதனால், அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன், கட்சி நிர்வாகிகள் உட்பட 250 பேரையும் கைது செய்தனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்த நபர்களை குண்டுகட்டாக தூக்கி, வேனில் ஏற்றினர். ரெய்டு முடிந்த பின்னர் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து பேசினர்.

* சோறு தரமாட்டாங்க...

கோவை மதுக்கரை, கோவைப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம், பாலத்துறை, எட்டிமடை, க.க.சாவடி, திருமலையம்பாளையம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து அதிமுகவினர், பொதுமக்களை வேனில் அழைத்து வர திட்டமிட்டனர். காலை, மதியம் உணவு தருவதாக கூறினர். ஆனால், போலீசார், தடுப்பு அமைத்து, அடைத்துவிட்டனர். கடந்த முறைபோல் சாப்பாடு கிடைக்காது, திரும்பிச்செல்லுங்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சில மணி நேரம் காத்திருந்த அவர்கள், அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

* கம்பெனியை காணோம்..!?

முறைகேட்டுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட சபரி எலக்ட்ரிக்கல் நிறுவனம் கோவை பீளமேட்டில் இயங்கி வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டாக இந்த நிறுவனத்தை காணவில்லை. கோவையில் எந்த ஒப்பந்த பணியும் எடுக்காமல் இந்த நிறுவனம் முடக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு வீட்டை முகவரிக்காக அலுவலகம் என்ற பெயரில் காட்டியிருந்தனர். இந்த நிறுவனம் வேறு பெயரில் செயல்படுகிறதா? கட்டுமான நிறுவனமாக மாறிவிட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏஸ் டெக் நிறுவனமும் தங்களது முகவரியை முறையாக காட்டவில்லை என தெரிகிறது.

* போலீசாருடன் சி.வி.சண்முகம் வாக்குவாதம்

சென்னை அடையார் எல்.பி.சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 9வது மாடியில் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ேநற்று சோதனை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது தனது காரிலேயே சோதனை நடக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சி.வி.சண்முகத்திடம் ‘சார் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதனால் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது’ என்றனர். அதற்கு சி.வி.சண்முகம், ‘நீ யார் என்னை உள்ளே செல்ல கூடாது என்று சொல்வது’ என பேசியபடி உள்ளே செல்ல முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சி.வி.சண்முகத்தை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றார். ஆனால் போலீசார் உள்ளே விடமுடியாது என்று கூறி சி.வி.சண்முகத்தை திருப்பி அனுப்பினர்.

* சிக்கியது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகள், நிறுவனங்களில் என தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 44 இடங்களில் இருந்து மொத்தம் ரூ.51.35 லட்சம் ரொக்கம், 3.10 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி பொருட்கள், வாக்கு தொடர்பான 436 ஆவணங்கள், 4 வங்கி பெட்டக சாவிகள், 10 சொகுசு கார்களை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல்  செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: