நான் முதல்வன் மண்டல மாநாடு தொடக்கம் பி.இ. முடித்தவர்கள் சிறு குறு தொழில் தொடங்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: இன்ஜினியரிங் முடித்தவர்கள் தங்கள் பகுதியில் சிறு, குறு தொழில்களை தொடங்க வேண்டும் என்று நான் முதல்வன் மண்டல மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். அண்ணா பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் மண்டல மாநாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது: நான் முதல்வன் பாடத்திட்டம் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவர்கள் இடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி கல்லூரி முதல்வர் முழுமையாக தெரிந்து கொண்டால்தான், மாணவர்களுக்கு  பயிற்சி வழங்க முடியும். அதற்காகத்தான் இந்த மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

முந்தைய காலத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர கடும் போட்டி இருந்தது. ஆனால்  இன்று அப்படியில்லை. அதே நேரத்தில் இப்போது மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் காலியிடங்கள் நிறைய உள்ளன. காலம் மாறுவதற்கு ஏற்ப பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்களாக அல்லாமல் முதலாளிகளாக தொழில் முனைவோர்களாக மாணவர்களை மாற்றும் பாடத்திட்டம் தான் நான் முதல்வன். பொறியியல் படித்து முடிப்பவர்கள் அவர்கள் பகுதியில் சிறு குறு தொழில்களை தொடங்க வேண்டும். அதற்காக பொறியியல் படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் பயிற்சி என்ற இரண்டும் மாணவர்களுக்கு தேவை. இன்று பலவற்றிலும் நுழைவுத் தேர்வுகள் திணிக்கப்படுகிறது. அதனால் தான் நான் முதல்வன் திட்டம் மாணவர்களுக்கு பயன் அளிக்கும். இவ்வாறு அவர்பேசினார்.

Related Stories: