வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் 10 தாதா கும்பலின் வீடுகளில் ரெய்டு: 60 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: வடமாநிலங்களை அச்சுறுத்தி வந்த 10 தாதாக்களின் கும்பலின் 40 வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில்  செயல்பட்டு வரும் தாதாக்களில் சிலர் சிறையிலும், உள்நாட்டிலும்,  வெளிநாட்டிலும் இருந்து கொண்டு சதி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ரகசிய  தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் பாடகர்  சித்து மூஸா வாலா  கொலை வழக்கின் பின்னணியில் இருந்த  25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களின் பின்னணி  விபரங்களும், சதி வேலைகளும் அம்பலமாகி உள்ளன.

தாதாக்களின் கொலைப் பட்டியலில் பாலிவுட்  நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோர் பெயரும் இருந்தது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று நாடு முழுவதும் 60 இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய தாதாக்கள், ரவுடிகள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ரெய்டுகள் நடக்கின்றன. அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் தாதாக்கள் நீரஜ் பவானா கும்பல், சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உள்ளிட்ட 10 தாதாக்கள் கும்பல் மீது என்ஐஏ வழக்குபதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிக்கும் கும்பல், கொலை, ஆள்கடத்தல், ஆயுதம் கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடைய தாதாக்கள் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்றன.

Related Stories: