துரைப்பாக்கம்,: வாகனம் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், உடற்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் நெருக்கடி நிறைந்த சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைதோறும் நடத்தப்படுகிறது. சென்னையில் அண்ணாநகர், ராஜிவ் காந்தி சாலை, அடையாறு காந்திநகர் 4வது பிரதான சாலை, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை, மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை, கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை, கே.கே.நகர் லட்சுமணன் சாமி சாலை, மெரினா காமராஜர் சாலை ஆகிய 8 இடங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 4 வாரங்களுக்கு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் ரெய்டு, கோணிப்பை ஓட்டப்பந்தயம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி மற்றும் கடந்த வாரம் 4ம் தேதி ராஜிவ் காந்தி சாலை துரைப்பாக்கம் சிக்னல் முதல் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், 3வது வாரமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் நடன நிகழ்ச்சி மற்றும் சைக்கிள் ரெய்டு, கிரிக்கெட், பூப்பந்து, கூடைப்பந்து, கோணிப்பை, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றதால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதாவது அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை சந்திப்பு முதல் சிக்னல் துரைப்பாக்கம் சிக்னல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை வழியாக துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, சென்றடைந்து, பின்னர் துரைப்பாக்கம் 200 சாலை சென்று ராஜிவ் காந்தி சாலை சென்றன. அதேபோல் சோழிங்கநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சிக்னல் 200 சாலையில் இடதுபுறம் திரும்பி 200 மீட்டர் சென்று பின்னர் துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு வழியாக சென்று, பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை வழியாக ராஜிவ் காந்தி சாலை செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை துரைப்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்திருந்தனர். இதனால், இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.