இசிஆரில் பரபரப்பு பூட்டிக்கிடந்த பங்களாவில் கொள்ளை அடிக்க முயற்சி; சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு மஞ்சள்போடு பகுதியில் பங்களா ஒன்று பூட்டி கிடந்தது. இதை நோட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல், அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி, கானத்தூர் நுண்ணறிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்து சென்றனர். இந்நிலையில், போலீசார் வருவதைப்  பார்த்ததும், அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தி,   6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து  விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள்  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சல்மான் பாட்சா (21) என்பதும், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருவதும், முகமது ஹஜாஸ் (18), தனியார் கம்பெனி ஊழியர், சாஹீல் அஹமத் (20), சிக்கன் கடை நடத்தி வருவதும், பைசல் ஹுசைன் (19), மெக்கானிக் வேலை செய்து வருவதும், முஹமது உமர் (19) மற்றும்  தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் கடந்த 3ம் தேதி இரவு திருவொற்றியூர் திருநகர் பகுதியில் ஒரு வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியதும், மறுநாள் 4ம் தேதி இரவு அந்த  இருசக்கர வாகனத்தில் பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது கொட்டிவாக்கத்தில் நடந்து சென்றவரிடம்  டேப்பை பறித்ததும், முட்டுக்காடு மஞ்சள்போடு பகுதியில், பங்களாவில் கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரியவந்தது. 6 பேரும் கோவளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கொள்ளை அடிப்பதற்கு திட்டம் போட்டது தெரிய வந்தது. 6 பேர் மீதும்  வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார்,  அவர்களிடமிருந்து 3 பைக், ஒரு டேப், கஞ்சா பொட்டலங்கள், 30 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுவனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: