லண்டன் பாலம் வீழ்ந்தது

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தை பொறுத்த வரை, எல்லாமே திட்டமிட்டபடியே நடக்கும். அதேபோல், ராணி எலிசபெத் மரணம் ஏற்படும் போது, எப்படி நடக்க வேண்டுமென சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு ‘ஆபரேஷன் லண்டன் பாலம்’ என பெயரிட்டுள்ளனர். ராணி இறந்த செய்தியை அவரது தனிப்பட்ட செயலாளர், இங்கிலாந்து பிரதமருக்கு ‘லண்டன் பாலம் வீழ்ந்தது’ என்ற சங்கேத வார்த்தையுடன் தெரிவிப்பார். ராணி இறப்பு தினம் ‘டி டே’ என குறிப்பிடப்படும். அதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்படும். பக்கிங்காம் அரண்மனை நுழைவாயில் கேட்டில், ராணி இறப்பு அறிவிப்பு வைக்கப்படும். அனைத்து டிவி, ரேடியோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு நிறுத்தப்படும். ராணி இறப்பு தகவல் வெளியிடப்படும். அன்றைய தினமே 3ம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்பார் என திட்டமிடப்பட்டிருந்தது.

*மறக்க முடியாத இந்திய பயணங்கள்

கடந்த 1952ல் இங்கிலாந்து ராணியாக முடிசூடிய இரண்டாம் எலிசபெத், 15 ஆண்டுகள் கழித்து 1961ம் ஆண்டு முதல் முறையாக தனது கணவர் இளவரசர் பிலிப்புடன் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்தார். ராஜபாதையில் குடியரசு தின விழாவிலும் பங்கேற்றார். ராஜ்கட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தை சுற்றிப் பார்த்த அவர், ஆக்ரா, மும்பை, வாரணாசி, ராஜஸ்தான், பெங்களூர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களுக்கும் சென்றார். அங்கெல்லாம் ராணிக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 1983ல் மீண்டும் தனது கணவர் பிலிப்புடன் இந்தியா வந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியையும், அன்னை தெரசாவையும் எலிசபெத் சந்தித்தார்.

3வது முறையாக 1997ல் இந்தியா தனது 50வது சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில் எலிசபெத் இந்தியா வந்தார். அப்போது, சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடிகர் கமலஹாசனின் மருதநாயகம் பட விழாவில் பங்கேற்றார். மேலும், பஞ்சாப் அமிர்தசரசில் நடந்த 50 ஆண்டு  ஜாலியன் வாலிபாக் நினைவு தினத்தில் ராணி எலிசபெத் பங்கேற்றார். அப்போது  அவர் இங்கிலாந்து சார்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவார்  என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கேட்கவில்லை. அதே சமயம், ஜாலியன்  வாலாபாக் நினைவிடத்தில் அவர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை  செலுத்தினார். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி இருந்தார். இது மன்னிப்பு கேட்பதை  விட பெரிய செயல் என ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அப்போது கொச்சிக்கும் அவர் வந்து சென்றார்.

*ஹாரியின் பிள்ளைகளுக்கு  இளவரசர், இளவரசி பட்டம்

மன்னராகி உள்ள 3ம் சார்லசின் முதல் மனைவி டயானா. இவர்களின் மகன்கள் இளவரசர்கள் வில்லியம்ஸ் மற்றும் ஹாரி. இதில் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காலம், பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்த ஹாரி-மேகன் தம்பதி பின்னர் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தங்களது குழந்தைகளுக்கு அரச பதவி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வாரிசு அடிப்படையில் ஹாரியின் மகன் ஆர்ச்சி, மவுண்ட்பேட்டன்-விண்ட்சரில் இருந்து இளவரசாகவும், மகள் லில்லிபெட் மவுண்ட்பேட்டன் விண்ட்சரில் இருந்து இளவரசியாகவும் பதவி பெற்றுள்ளார். ராணி எலிசபெத் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானவுடன், ஹாரி தனி விமானம் மூலம் ஸ்காட்லாந்து புறப்பட்ட நிலையில், அவரது மனைவி மேகன் இங்கிலாந்தில் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் ராணியை காண செல்லவில்லை. அதே போல், இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேட் வில்லியம்ஸ், தனது 3 குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதில் பிஸியாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கேட் வில்லியம்ஸ் மீது ஹாரி-மேகன் தம்பதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

*கோஹினூர் வைரம் யாருக்கு?

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது, உலகின் அரிதினும் அரிதான கோஹினூர் வைரம் பல கைகள் மாறி, இங்கிலாந்து ராணி வசம் சென்றது. ராணி எலிசபெத் அந்த வைரத்தை தனது கிரீடத்தில் பதித்துள்ளார். விலைமதிக்க முடியாத இந்த வைரத்துடன் உள்ள கிரீடம், மன்னர் 3ம் சார்லசின் மனைவியும் இங்கிலாந்தின் புதிய ராணியுமான கமீலாவுக்கு இனி சொந்தமாகப் போகிறது. எலிசபெத் ராணியாக தனது 70ம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது, கமீலா அடுத்த ராணியாக பதவி வகிப்பார் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

*சர்ச்சில் முதல் லிஸ் வரை 15 பிரதமர்களை கண்டவர்

எலிசபெத் தனது பதவிக்காலத்தில் 15 இங்கிலாந்து பிரதமர்களை கண்டுள்ளார். கடந்த 1952-1955 வரை பதவி வகித்த வின்ஸ்டன் சர்ச்சில் எலிசபெத் பதவிக்காலத்தில் பொறுப்பேற்ற முதல் பிரதமர். கடைசியாக தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ்சை கடந்த செவ்வாய்கிழமை பிரதமராக எலிசபெத் நியமித்தார். இதுதான், எலிசபெத் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியும் கூட.

*35 நாட்டு நாணயத்தில் உருவம்

காமன்வெல்த் நாடுகளின் தலைவரான ராணி எலிசபெத்தின் உருவம் 33 நாடுகளின் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக உலக நாணயங்களில் இடம் பெற்ற நபர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர். அதிக ஒலிம்பிக்கை தொடங்கி வைத்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்த ஒரே நபர் என்ற சிறப்பையும் ராணி எலிசபெத் பெற்றுள்ளார். இவர் 1976 மாண்ட்ரீல் ஒலிம்பிக் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார்.

*காமராஜர் முன்னிலையில் மகனுக்கு பிறந்தநாள் விழா

கடந்த 1961ம் ஆண்டு ராணி எலிசபெத் இந்தியா வந்த போது சென்னைக்கும் வந்திருந்தார். அப்போது, அவரது மகன் ஆன்ட்ரூவின் முதல் பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக, ராஜாஜி அரங்கில் பிறந்தநாள் விழாவை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் ஏற்பாடு செய்தார். அந்த விழாவில், ராணி எலிசபெத் கேக் வெட்டி, முதல்வர் காமராசருக்கு பரிமாறினார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வரலாறாக மாறியது.

*8 பேரக் குழந்தைகள் 12 கொள்ளு பேரன்கள்

இளவரசர் பிலிப் கடந்த 2021ம் ஆண்டு இறந்த போது, அவருடன் 73 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத் வாழ்ந்துள்ளார். இதன் மூலம், 69 ஆண்டு 62 நாள் பதவிக் காலத்துடன் இங்கிலாந்து ராணியுடன் மிக நீண்ட காலம் வாழ்ந்த கணவர் என்ற பெருமையை பிலிப் பெற்றார். பிலிப்-எலிசபெத் தம்பதிக்கு 4 குழந்தைகள், 8 பேரக் குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.  எலிசபெத் தனது ஆட்சிக் காலத்தில் 82 முறை அரசு முறைப்பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு தனது 89வது வயதுடன் வெளிநாட்டு பயணங்களை அவர் தவிர்த்துவிட்டார்.

*உலகப் போரில் பங்கேற்றவர்

ராணி 2ம் எலிசபெத் அரண்மனையில் வாழ்ந்து வெறும் சொகுசு வாழ்க்கையை மட்டும் அனுபவித்தவர் அல்ல. 2ம் உலகப் போரில் பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக சேவை புரிந்தவர். இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் ராணுவ சேவையாற்றிய ஒரே ராணி எலிசபெத் மட்டுமே. அதுவும் 18வது வயதிலேயே ராணுவத்தில் இருந்துள்ளார். அப்போது, டிரக்குகளின் டயர்களை கழற்றி மாட்டுவது உள்ளிட்ட சில மெக்கானிக் வேலைகளையும் கற்று தேர்ந்தவர். தனது 14வது வயதிலேயே துப்பாக்கி சுட கற்றுக் கொண்டவர். 1976ம் ஆண்டு மன்னர் பரம்பரையில் முதல் முறையாக இமெயில் அனுப்பியவர் என்ற பெருமைக்குரியவர் எலிசபெத்.

*ரூ.7,000 கோடிக்கு அதிபதி

ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.3,300 கோடியாகும். இது 2017ல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இப்போது கிட்டத்தட்ட ரூ.7,000 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்தும் புதிய மன்னர் 3ம் சார்லசுக்கு கிடைக்கும். இதுதவிர அரசு குடும்பத்திற்கு அசையா சொத்து ரூ.2.2 லட்சம் கோடிக்கு இருக்கிறது.

*பாஸ்போர்ட் இல்லாதவர்

பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்கும் செல்லக் கூடிய அதிகாரம் படைத்தவர் ராணி எலிசபெத். இங்கிலாந்து மன்னர் குடும்பத்தில் மற்ற அனைவருக்கும் பாஸ்போர்ட் தேவை. ஆனால், பாஸ்போர்ட்டில் அதிகாரப்பூர்வ கையெழுத்திடுபவரான எலிசபெத்துக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அதே போல, இங்கிலாந்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடிய அதிகாரமும் ராணிக்கு உண்டு. இங்கிலாந்து கரன்சியிலும் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். இனி மன்னர் 3ம் சார்லஸ் புகைப்படம் அச்சடிக்கப்பட்டு புதிய கரன்சிகள் வெளியிடப்படும். பழைய கரன்சிகளும் புழக்கத்தில் இருக்கும். அதே போல, தேசிய கீதத்திலும் ராணியை குறிக்கும் அவள் என்ற வார்த்தை சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.

Related Stories: