சாரல் மழையால் கடையம் ராமநதி அணை நிரம்பியது: உபரிநீர் திறப்பு

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உச்சநீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள், 33க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 25ம்தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கபட்டது. தொடர்மழை காரணமாக ஆக. 3ம்தேதி அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறக்கபட்டது.

தொடர்ந்து மழை குறைந்து அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. ஆக.23ம்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியானது. மேற்கு தொடர்ச்சி மலை, அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல்  மழை பெய்து அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இன்று காலை அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தபட்டு அணைக்கு வரும் 110 கனஅடி நீர் முழுவதுமாக உபரிநீராக ஆற்று மதகுகள் மூலமாக 60 கன அடி நீரும், முக்கிய மதகுகள் வழியாக 50 கன நீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

அணை பாதுகாப்பு பணியில் உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஊழியர்கள் ஜோசப், பாக்கியநாதன், துரைசிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: