வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்-விவசாயிகள் மகிழ்ச்சி

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டி இருந்த 5 அடி உயர தடுப்பணையை, சில ஆண்டுகளுக்கு முன்பு 12 அடி உயர தடுப்பணையாக உயர்த்தி கட்டியது. இதனால், தமிழகத்திற்கு வருகின்ற பாலாற்றின் நீர்வரத்து குறைந்து விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திர வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், புல்லூர் அடுத்த பெரும்பள்ளம் பகுதியில் ஆந்திர அரசால் கட்டப்பட்டுள்ள 12 அடி உயர தடுப்பணை முழுவதும் நிரம்பி தமிழகத்திற்கு அதிக அளவிலான நீர் வெளியேறி வருகிறது. இந்த பாலாற்று வெள்ள நீரானது புல்லூர் வழியாக திம்மாம்பேட்டை, அவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக 6 மாவட்டங்களை கடந்து வங்ககடலை சென்றடைகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தடுப்பணை முழுவதும் நிரம்பி அதிக அளவிலான நீர் வெளியேறி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: