சாதி, மதங்களை கடந்து சகோதரர்களாக வாழ உறுதியேற்போம்: தலைவர்கள் ஓணம் வாழ்த்து

சென்னை: சாதி, மதங்களை கடந்து சகோதரர்களாக வாழ உறுதி ஏற்போம் என அரசியல் கட்சி தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் (அதிமுக): ஓணம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று விமரிசையாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இபிஎஸ் (அதிமுக): பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை வசந்த கால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக): ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். எனவே, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

டிடிவி.தினகரன் (அமமுக): இந்நன்னாளில் சாதி, மதங்களைக் கடந்து, அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கு உறுதியேற்போம். பேசுகிற மொழி வெவ்வேறாக இருந்தாலும், இந்தியர் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு நிற்போம்.

சசிகலா: மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக திருவோண திருநாளை ஆண்டு தோறும் பாரம்பரியமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஓணம் பண்டிகை ஜாதி, மதம், இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாடும் மிகச் சிறந்த பண்டிகை. இந்நாளில் தமிழகத்தில் வாழும் மலையாளம் மொழிப் பேசும் கேரள மக்கள் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புமணி (பாமக): ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி): கேரள மக்களுக்கும், தமிழகத்தில் வாழும் மலையாள இன மக்களுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

சரத்குமார் (சமக தலைவர்): சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மேலோங்கச் செய்யும் ஓணம் திருநாளில், இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், வளமும், நலமும் பெருகட்டும் என வாழ்த்தி, உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரள மக்களுக்கும் இனிய திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்: உலகம் முழுவதும் உள்ள மலையாள  மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கடுமையாக உழைக்கக்கூடிய நம்  நாட்டு மற்றும் மாநில கலாச்சாரத்தை மிக பெருமையுடன் முன்னிறுத்துகின்ற  கேரளத்து சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,  தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதரர்களும், சகோதரிகளும் ஒன்றாக நம் தேச  எண்ணத்தோடு உழைத்து முன்னேறும் போது இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப்  பெரும்.

அண்ணாமலை(பாஜக):  தமிழகத்தில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை. அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகிறார்கள்.

ஓணம் திருவிழா, நம் கேரள சகோதர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், கொண்டாடும் திருவிழாவாகவும் திகழ்கின்றது. தமிழக பாஜ சார்பில் வாழ் த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: