இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் முடிவு

சென்னை: இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் பிறகு நடந்த சட்டப்போராட்டத்துக்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.ஆனால்,  சுமார் 2  மாதங்கள் ஆனாலும் அவர் இன்னும் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்லவில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக இன்று காலை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சார்பில் நிர்வாகிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 8ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள நிறுவன தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக கட்சி தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், அதிமுகவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி தனது ஆதரவாளர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வர உள்ளதால், இதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஜூலை 11ம் தேதி அன்று நடைபெற்றது போன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: