பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது; ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி: ராகுல் காந்தி பேச்சு..!

குமரி: ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,570 கி.மீ, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதேசங்கள் வழியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற 150 நாட்கள் பாத யாத்திரையில் 3,570 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பின்னர் கடற்கரை சாலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; நடைபயணத்தை துவக்கி வைத்து சிறப்பித்த தமிழக முதல்வர், என்னுடைய சகோதரர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு எப்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தப் பயணம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோடிக்கணக்கான மக்கள் விரும்புகின்றனர். தேசியக்கொடியை பார்க்கும் போது அதன் மாட்சிமை மகத்துவத்துக்காக அதை வணங்கி வாழ்த்த வேண்டும். இங்கு பறக்கும் தேசியக்கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. தேசிய கொடி நாட்டின் அனைத்து மொழிகள், மாநிலங்களை பிரதிபலிக்கிறது. மூவர்ண தேசியக் கொடி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் அடையாளம்.

நமது தேசியக் கொடி ஆபத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளும், ஒவ்வொரு ஊடகங்களும் தேசியக் கொடியை பாதுகாக்க வேண்டும். இந்தியாவை மொழி, மத ரீதியாக பிளவுபடுத்திவிடலாம் என பாஜக நினைக்கிறது; ஆனால், ஒருபோதும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது. இந்தியாவை பாஜகவால் பிளவுபடுத்த முடியாது. பாஜக ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாகவே நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள், கூலி தொழிலாளிகள், ஏழைகளை திட்டமிட்டு வஞ்சிக்கிறது பாஜக அரசு. பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது. பெரு முதலாளிகளுக்கான திட்டங்களையே பிரதமர் கொண்டு வருகிறார். ஏழை மக்களைப் பற்றி மோடி அரசு சிறிதும் கவலைப்படுவதில்லை; ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்; ஒரு நாளும் பயப்பட மாட்டோம். பாஜக மிரட்டலுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சிகள் அடிபணியாது. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சிக்கலை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது. பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: