ஆந்திராவில் ஆளும் கட்சி நிர்வாகி மது விருந்து விநாயகர் ஊர்வலத்தில் குடிமகன்களான பக்தர்கள்

திருமலை: விநாயகர் சிலையை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சியில் பிரசாதம் அல்லது அன்னதானம் வழங்குவார்கள். ஆனால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டிற்கு ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள கேட் சென்டர் அருகே  டிராக்டரில் குழாய் பொருத்திய பேரலில் ஒயின் கொண்டு வந்து போலீசார் கண்முன்னே வினியோகம் செய்தனர். இந்த மது விருந்து குறித்து அறிந்த மது பிரியர்கள் விநாயகர் ஊர்வலத்தை காண வந்ததை விட மது குடிப்பதற்காக வரிசையில் நின்று வாங்கி குடித்து சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் டம்ளர்களுடன் ஒயினுக்காக அலைமோதிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர், ‘போலீசார் கண் முன்னே ஆளும் கட்சியினர் பேரலில் மதுபானம் கொண்டு வந்து குழாயில் தண்ணீர் வினியோகம் செய்வது போன்று மதுபானம் விநியோகம் செய்தது கண்டனத்துக்குரியது. முதல்வர் வீட்டின் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் விநாயகர் ஊர்வலத்தை காண வந்த பெண்களை அவமானப்படுத்தும் செயல்’ என குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: