இலங்கை அதிபர் அதிகாரத்தை குறைக்கும் 22வது சட்ட திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி: விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

கொழும்பு: இலங்ககையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 22வது சட்டத்திருத்தத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமரையும், அமைச்சர்களையும் நீக்கம் செய்ய அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்துக்கே மீண்டும் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற அம்சங்கள் அடங்கிய 22வது சட்டத்திருத்ததை பிரதமராக ரணில் இருக்கும்போது கொண்டு வரப்பட்டது. இதற்கு அதிபராக இருந்த கோத்தபய கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், அவர் பதவியை ராஜினாமா செய்தபின் அதிபரான ரணில் இச்சட்டத்தை கொண்டு வர தீவிர முயற்சித்து எடுத்தார். நீண்ட இழுபறிக்கு பின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 22வது சட்டத்திருத்தத்துக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்படலாம் மற்றும் அரசியலமைப்புக்கு முரணான சட்டத்தின் 2 மற்றும் 3வது சரத்துகள் மீதான நாடு தழுவிய வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 22வது சட்டத்திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி உள்ளதால், விரைவில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related Stories: