பங்காருபாளையம் அருகே 65 வெங்கடாபுரம் கிராமத்தில் வீட்டை காலி செய்யும்படி மிரட்டும் ஆளும் கட்சியினர்-நடவடிக்கை எடுக்க விதவைப்பெண் கோரிக்கை மனு

சித்தூர் : பங்காருபாளையம் அடுத்த 65 வெங்கடாபுரம் கிராமத்தில் பெண்ணை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். மேலும், வீட்டை மீட்டு தர கோரி கலெக்டர் முருகன் ஹரிநாராயணாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் முருகன் ஹரிநாராயணாவிடம் வழங்கினர். இந்த மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.

அதன்படி, இருளர்(யானாதி) வகுப்பை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் காடுகள், விவசாய நிலங்களில் எலிகளை வேட்டையாடி குடும்பம் நடத்தி வருகிறோம். மாநில அரசு யானாதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. ஆனால், அதை அதிகாரிகள் யாரும் சரியான எக்களுக்கு வழங்குவதில்லை. ஏராளமானோர் வீடுகளின்றி அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை எஸ்டி மாநில கமிஷனர், கலெக்டரிடம் புகார்கள் தெரிவித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி தர வேண்டும். சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

பங்காருபாளையம் அடுத்த கொத்தகாலனியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், ‘கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி தரப்பட்டது. தற்போது அரசு வழங்கிய வீடுகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் காலனிக்கு செல்லும் சாலையை எங்கள் பகுதி சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார். ஆகவே, வீடுகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் பெரும் அவதிப்படுகிறோம்.

நாங்கள் மண்டல வருவாய்த்துறை அலுவலகம், கிராம வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் காலனிக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாய் வசதி, சிமெண்ட் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

பங்காருபாளையம் அடுத்த 65 வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த மஸ்தானி என்பவர் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் எங்களுக்கு சொந்தமான வீட்டை இடித்து தள்ள ஆடி ஆட்களுடன் வந்தார். இதனை நாங்கள் தட்டி கேட்டோம். அதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் வீடு கட்டி உள்ளீர்கள். இதற்கு அருகே எனது விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலம் எனக்கு சொந்தமானவை. ஆகவே, நீங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என அடியாட்களுடன் வந்து எங்களை தாக்கி மிரட்டி 10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என வற்புறுத்தினார்.

எனது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் குறைவால் இறந்து விட்டார். எங்களுக்கு ஆண் துணை யாரும் இல்லாததால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் புஷ்பராஜ் துளசிராம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எங்களுக்கு சொந்தமான வீட்டை எங்களுக்கு மீட்டு தர வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

வீடுகளை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை

வெதுருகுப்பத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கடந்த 22 ஆண்டுகளாக மாநில அரசு கட்டி கொடுத்த இலலவச வீடு வீட்டு மனைபட்டாவில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அதேபகுதிையை சேர்ந்த பாஜ கட்சி தலைவர் அரிநாத் என்பவர் எங்களது வீடுகளை ஆக்கிரமித்துள்ளார். எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை மீட்டு தர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் எங்களுக்கு வழங்கிய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி வழங்கி விடுவோம்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: