வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூர்: மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

பெங்களூரு: பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் நேற்று மாலை சுமார் 6 மணி முதல் தொடங்கிய கனமழையானது நள்ளிரவு வரை இடைவிடாமல் சுமார் 5 மணி நேரம் வரை கொட்டிதீர்த்தது. இதனால் சிவாஜி நகர், ராமமூர்த்திநகர், மடிவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்தது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தால் நூற்றுக்கணக்கான இருசக்கரவாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கி பாதிப்பு அடைந்திருக்கின்றன. குறிப்பாக இன்று காலை வரை இந்த வெள்ள நீரானது தற்போது வரை வடியாத காரணத்தினால் பெங்களூரு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் பணிக்கு செல்ல அவதிபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் படியாததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை பெங்களூரு மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபடாமல் இருக்கிறார்கள். மழை நீரை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் ஒருவாரமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு உரிய நிவாரணம் நிதியையும் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகளை மக்கள் எழுப்பியுள்ளனர்.

Related Stories: