5 எம்எல்ஏ.க்களை வளைத்து போட்டதால் ஆவேசம்; நீங்கள் செய்தது முறையா? பாஜ.வுக்கு நிதிஷ் கேள்வி

பாட்னா: மணிப்பூரிலும் ஆபரேஷன் தாமரை மூலம் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் இழுக்கப்பட்டுள்ளதால் ஆவேமடைந்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘இதுதான் அரசியலமைப்பா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். பீகாரில் பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், இந்த கூட்டணியை கடந்த மாதம் முறித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து தற்போது புதிய ஆட்சியை அமைத்துள்ளார்,  இதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது பற்றிய பேச்சும் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், பீகாரில் பாஜ.வின் கூட்டணியை முறித்து கொண்டாலும் மணிப்பூரில், அக்கட்சியுடன் நிதிஷ் கூட்டணியை தொடர்ந்தார். கடந்த மார்ச்சில் இங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜ கூட்டணி 55 இடங்களை கைப்பற்றியது. இதில், ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வென்றது. இந்த சூழலில், மணிப்பூரில் பாஜ உடனான கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்க, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டம் செப்.3, 4ம் தேதி நடைபெறும் என்று நிதிஷ் அறிவித்தார்.  

ஆனால், நேற்று முன்தினம் இரவு மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள், பாஜவில் இணைந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் 2 நாள் செயற்குழு கூட்டம் பாட்னாவில் நேற்று தொடங்கியது. இதில், மணிப்பூரில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற ஆதரவு அளிக்கப்பட்டது. அவர் அளித்த பேட்டியில், ‘பாஜ குதிரை பேரம் (ஆபரேஷன் தாமரை) மூலம் வெற்றி பெற்றுள்ளது.

இது முறையானதா? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா? அவர்கள் எல்லா இடங்களிலும் இதை செய்கிறார்கள். எனவே, 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்,’ என தெரிவித்தார்.

நாளை டெல்லி பயணம்: தனது கட்சியின் செயற்குழு கூட்டதை முடித்து கொண்டு, நிதிஷ் குமார் நாளை டெல்லி செல்கிறார். அங்கு பாஜ.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றியணைக்கும் முயற்சியாக ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

Related Stories: