ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தில் 1000 பேர் பயன்; டீன் தகவல்

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் திறக்கப்பட்ட மூன்று மாதங்களில் 1000 பேர் பயன் பெற்றுள்ளனர் என  மருத்துவமனை டீன் கூறியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த மே மாதம் 29ம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இங்கு ரத்த பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை, சிறுநீரக, கல்லீரல் பரிசோதனை, தைராய்டு, மஞ்சகாமாலை நோய் கண்டறிதல், இசிஜி,  எச்ஐவி, சிறுநீரகம், வயிறு ஸ்கேன் போன்ற 16 வகையான பரிசோதனைகளும், பெண்களுக்கு கர்பப்பை, வாய்ப்புற்று நோய் கண்டறிதல், எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.  

இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் 1000 பயனாளிகள் இந்த முழு உடல்களை பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை டீன் பாலாஜி கூறுகையில், ‘‘ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  குறைந்த கட்டணத்தில் இந்த முழு உடல் பரிசோதனை திட்டத்தை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இங்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய் கண்டறிந்தால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே அவர்களுக்கு தரமான சிகிச்சை மற்றும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய 3 மாதத்தில் ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னும் போகப்போக பயனாளிகள் எண்ணிகை உயரக்கூடும்,’’ என்றார்.

Related Stories: