பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் நாளை முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி  ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு  நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து  செய்து உத்தரவிட்டனர். தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த தீர்ப்பை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள்  அரவிந்த் பாண்டியன், மனோஜ் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி பிரகாஷ்  ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி  வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள்  தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரி எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் கேவியட் மனு  தாக்கல் செய்ய உள்ளனர். மீண்டும் இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து  பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: