பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் 500 பால்குட அபிஷேகம்; அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 5 சுவாமிகள் ஊர்வலம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் 500 பால்குட அபிஷேகம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 5 சுவாமிகள் வீதியுலா வந்தன. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சரோஜினி அம்மாள் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் 24ம் ஆண்டு 8வது வார ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி நேற்று 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அப்போது விநாயகர், நாகாத்தம்மன், பெருமாள் உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி ரதத்தில் ஊர்வலமாக வந்தன. அப்போது பக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறவை காவடி போல தொங்கியபடி வந்து 5 சுவாமிகளுக்கும் மாலை அணிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பால்குடம் ஊர்வலமாக வந்து நிறைவாக நாகாத்தம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மழை பெய்து நாடு செழிக்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் வேண்டி இந்த பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, வரதராஜபுரம், அகரம்மேல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சேர்ந்து செய்திருந்தனர்.

Related Stories: