புதுகையில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை திருட்டு சிசிடிவி பொருத்த சென்றவர் கைது: தனிப்படைக்கு எஸ்.பி. வந்திதா பாண்டே பாராட்டு

புதுக்கோட்டை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை திருடியதாக சிசிடிவி கேமரா பொருத்த சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே பாராட்டி வெகுமதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோனாப்பட்டு, புதுமனை ஆரோக்கியபுரத்தில் சர்ச் அருகே கடந்த 17ம் தேதி வீட்டில் தனியாக வசித்து வந்த வசந்தா (62) என்பவரை அடையாளம் தெரியாத நபர் கொலை செய்து நகை மற்றும் சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவைகளை கொள்ளையடித்தது தொடர்பாக திருமய காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் எஸ்பி உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், வீட்டைப்பற்றி நன்றாக தெரிந்தவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இதனால் வீட்டின் அருகில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

 அதேநேரத்தில், கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராவும், ஹார்ட் டிஸ்க்கும் மாயமாகி இருந்தது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் சிசிடிவி கேமரா பற்றி தெரிந்தவர்கள் கொலையை செய்திருக்கலாம் என்பதால் அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

அப்போதுதான், சிசிடிவி கேமரா பொருத்திய நபரே ஏன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. எனவே, அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வசந்தாவின் பாதுகாப்பிற்காக வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது தெரிய வந்தது. அதை பொருத்திய நபரை போலீசார் தேட ஆரம்பித்தனர். தீவிர தேடுதலில், சிசிடிவி கேமரா பொருத்தியவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, புது தெருவை சேர்ந்த அம்மாசி மகன் சிவகுமார் (27) என்பது தெரிந்தது. இதனால் அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்தான் சென்ற சிசிடிவி கேமராவை பொருத்தியது என தெரிந்தது. மேலும் கொலை நடந்த அன்று, வசந்தா தனியாக இருப்பதை தெரிந்து, நோட்டமிட்டு கடந்த 17ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த வசந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

அதன்படி தனிப்படையினர் அவரிடம் இருந்து 16 சவரன் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், சிசிடிவி கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக சிசிடிவி கேமராவை உடைத்து கிணற்றில் போட்டதாகவும் போலீசாரிடம் சிவகுமார் தெரிவித்தார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த குற்றவாளியை, சிறப்பு புலன் விசாரணை செய்து கண்டுபிடித்த  தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார். மேலும், தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் தெரியாதவர்கள் வந்தால் வீட்டுக்குள் விட வேண்டாம். சந்தேகம் இருந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: