விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து, 2 பேர் பரிதாபமாக பலியாகினர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை விநாயகர் சதுர்த்தியையொட்டி சப்பரத்தில் விநாயகர் சிலையை வைத்து ஊர்வலம் நடத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் சப்பரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் சப்பரத்தை இழுத்து வந்த தனியார் மருந்துக்கடை ஊழியர் முனீஸ்வரன் (24), வாசுதேவநல்லூர் செங்கல் சூளை உரிமையாளர் மாரிமுத்து (33) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் செல்வகிருஷ்ணன் (32), செல்லப்பாண்டி (42), முப்பிடாதி (23) ஆகியோர் படுகாயம் அடைந்து, தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

தகவலறிந்து, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார் கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர்கள் கூறுகையில், ‘‘இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். மேலும், திமுக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

Related Stories: