சைதாப்பேட்டை அண்ணா சாலையில் கலைஞருக்கு முழு உருவ பிரமாண்ட சிலை: சென்னை மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை: சைதாப்பேட்டையில் கலைஞருக்கு முழு உருவ சிலை பிரமாண்டமாக அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சைதாப்பேட்டை தொகுதியில் 1967 முதல் 1977ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பு வகித்தார். அரசியல், கலை, இலக்கியம், திரைத்துறை, நிர்வாகத்துறை என ஏற்றுக் கொண்ட அத்தனை துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு கால கட்டங்களில் பல பிரதமர்களை, குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். வளரும் அறிவியல் தன்மைகேற்ப இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தவர்.

பெண் இனத்தை ஆண்களுக்கு நிகரான ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கென தனித்துவமான சட்டங்களை, திட்டங்களை உருவாக்கியவர் தொழில் துறையிலும், கல்வித்துறையிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழகத்தை முன்னோடியாக விளங்க செய்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலைஞருக்கு சைதை தொகுதியில் ஒரு முழு உருவ சிலை அமைத்திட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட கால விருப்பம். அதன் அடிப்படையில், சைதாப்பேட்டையில் 142வது வார்டுக்குட்பட்ட பஜார் சாலை- அண்ணா சாலை சந்திக்கும் இடத்தில் கலைஞருக்கு ஒரு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று வார்டு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரியிருந்தார்.  அதனை ஏற்று, சைதாப்பேட்டை தொகுதி சென்னை மாநகராட்சி 10வது மண்டலத்துக்குட்பட்ட 142வது வார்டு, பஜார் சாலை- அண்ணா சாலை சந்திக்கும் இடத்தில் கலைஞருக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: