பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 50ம் ஆண்டு விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை:  பெசன்ட் நகரில் உள்ள அனனை வேளாங்கண்ணி ஆலயத்தின் 50ம் ஆண்டு பொன்விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பொன்விழா ஆண்டு அன்னை மரியின் வழியில் கூட்டு ஒருங்கியக்கப் பயணம் என்ற மையக் கருத்தில் நடக்கிறது. கொடியேற்று விழாவையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாலையில், புனித ஆரோக்கிய மாதா கொடி  மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில்,  கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பெசன்ட் நகர் முக்கிய  சாலை வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

இதையடுத்து பொன் விழாவை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கிரீடத்துக்குள் அன்னை வேளாங்கண்ணி உருவம் பொறிக்கப்பட்ட லச்சினையை    சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு பிரார்த்தனை நடத்தியபின் புறா மற்றும் பலூன்களால ஆன ஜெபமாலை பறக்க விடப்பட்டது. மேலும் புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட 12  அடி நீள கொடியை 75 அடி உயர வெண்கல கம்பத்தில் பேராயர்  ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். இதை அடுத்து சிறப்பு திருப்பலி நடந்தது.

கொடியேற்ற நிகழ்சியில் கலந்துகொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களைச்  சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும், பேருந்து மற்றும் கார், பைக்கில் வந்தனர். இன்று உழைப்பாளர் விழா, 31ம் தேதி இளையோர் விழா, செப்டம்பர் 1ம் தேதி இறை அழைத்தல் விழா, 2ம் தேதி நலம் பெறும் விழா, 3ம் தேதி பக்த சபைகள் விழா, 4ம் தேதி   நற்கருணைப் பெருவிழா, 5ம் தேதி ஆசிரியர்கள் தினம், 6ம் தேதி குடும்ப விழா, 7ம் தேதி தேர் திருவிழா, 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா மற்றும் கோயிலின்   50ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அதிகாலை 3.30 மணி முதல் தொடர்ந்து மாலை 5 மணி வரை திருப்பலிகள் நடைபெறும். 5.30 மணி திருப்பலி முடிந்தவுடன்  கொடி இறக்கத்துடன் விழா முடிகிறது.

Related Stories: