திருத்துறைப்பூண்டி கோயிலில் 40 ஆண்டுக்கு முன் திருட்டு பல கோடி மதிப்பு தேவி, விநாயகர் சிலைகள் நியூயார்க்கில் கண்டுபிடிப்பு: யுனெஸ்கோ ஒப்பந்தப்படி மீட்க நடவடிக்கை

சென்னை: திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வரி கோயிலில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பல கோடி மதிப்புள்ள தேவி மற்றும் விநாயகர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நியூயார்க்கில் கண்டுபிடித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வரி சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளதாகவும், அந்த சிலையை கண்டுபிடித்து தரும்படியும் பாலு என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இந்திரா விசாரணை நடத்தினார். அதில், விநாயகர் சிலையுடன் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி அம்மன், நவக்கிரக சூர்யா, போகசக்தியம்மன், நடன சம்பந்ததர், சந்திரசேகர் அம்மனுடன் சந்திரசேகர், நின்ற சந்திரசேகர் என 11 சிலைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோயில்களின் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் படங்களை ஆய்வு செய்த போது, இந்த 11 சிலைகளின் புகைப்படங்கள் இருந்தது  தெரியவந்தது.அதைதொடர்ந்து வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு விநாயகர் சிலை அமெரிக்காவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 சிலைகளும் இந்தியாவிற்கு கொண்டு வர யுனெஸ்கோ ஒப்பந்தப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீதமுள்ள 9 சிலைகளை கண்டுபிடிக்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சிலைகளும் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு பல கோடிக்கு விற்பனை செய்து இருப்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: